செவ்வாய், 2 ஜூன், 2009

‘இந்தியன் எங்கே… எக்கேடு கெட்டால் நமக்கென்ன!’


தமிழ் மக்களின் மனங்கள் எந்த அளவு வெறுமையின் விளிம்பில்… மரத்துப் போய் கிடக்கின்றன என்பதற்கு ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் நிலையை வெறும் பார்வையாளனாகக் கூட கவனிக்க மறுப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக இம்மாதிரி தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு முதல் கல்லை விட்டெறிபவன் அல்லது ஒங்கிக் குரல் கொடுப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான். எல்லையில் துன்பமென்றாலும் எல்லை தாண்டி எங்கோ ஒரு தேசத்தில் இந்தியன் துன்பப்பட்டாலும் முதலில் துடிப்பவன் தமிழனாகவே இருந்திருக்கிறான்!

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட இனவெறிக்கு நிகரான ஒரு துயரத்தை இந்திய மாணவர்கள், பகுதி நேர பணியாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ‘ஓ அப்படியா’ என்று சாவதானமாகக் கேட்டுவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறான் தமிழன்.

இந்திய அரசின் அபார சாதனை இது! அதுவும் தனிமனித சாதனையல்ல… சோனியா-மன்மோகன் சிங் - நம்பியார்கள் - மேனன்கள் - முகர்ஜிகள் செய்துள்ள அபார சாதனை!

ஆயிரக்கணக்கில் எம்மவர் கொல்லப்பட்டு, ஒரு இனமே உருத்தெரியாமல் அழிக்கப்பட்ட போது குறைந்தபட்சம் ‘ஏன் இப்படி?’ என்ற மனிதாபிமானக் கேள்வியைக் கூட எழுப்பாமல், அந்த இனவெறிக்கு ஐநா மன்றம் வரை தோன்றாத் துணையாய் நின்ற இந்தியாவும் அதன் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற உணர்வின் வெளிப்பாடுதான் இது.

‘ஈழப் பிரச்சினையை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஆபத்து… இது இந்தியத் தமிழர்கள் மனதில் நீங்காத காயத்தையும் அதன் வடுக்களையும் மட்டுமே விட்டுச் செல்லும் இந்தப் போக்கு. அது இந்தியன் என்ற உணர்வுக்கே ஆபத்து!’ என்று தமிழுணர்வாளர்கள் குறிப்பிட்டது இப்படியொரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே.

ஆனால் அப்படிச் சொன்னதற்காக அவர்களை பிரிவினைவாதிகளாக்கி குண்டர் சட்டத்தில் போட்டு தன் பலத்தைக் காட்டியது வெறும் அரசியல் லாபத்தை மட்டுமே கணக்கிட்டுக் கொண்டிருந்த ஆளும் கட்சி.

பிரிவினைவாதம் என்றதும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு தனிநாடு கேட்பது மட்டும்தான் என்று நினைப்பது எத்தனை அபத்தம்… ஒரு இனத்தை மனதால் அந்நியப்படுத்தி விட்டாலே போதாதா… இன்று சக இந்தியனுக்கு என்ன நேர்ந்தாலும் அது குறித்த குறைந்தபட்ச அக்கறை கூட காட்ட மனமின்றி இறுகிக் கிடக்கிறது தமிழன் மனம்.

ஏர் பிரான்ஸ் விமானம் 228 பேருடன் விழுந்து நொறுங்கியதற்குக் கலங்கும் தமிழன் விழிகள், ஆஸ்திரேலியாவில் அவதிப்படும் சக இந்தியனுக்கு கலங்க மறுப்பதை இப்போதும் இந்தியா அலட்சியப்படுத்தினால், அது மாபெரும் வரலாற்றுத் தவறாகவே முடியும்!

-விதுரன்

2 கருத்துகள்:

என்னப்பா நீ பாகிஸ்தான் மும்பைல பண்ண அட்டுழியத்துக்கே இன்னும் பதிலை காணோம்....இப்ப எல்லாம் இந்தியா இதில் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கு......

கருத்துரையிடுக